வியாழன், 1 ஆகஸ்ட், 2024

காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு


தமிழ் மாதங்களில் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆடிப்பெருக்கு சமயத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகின்றது. காவிரி ஆற்றில் புதிய தண்ணீர் வருகின்ற சமயத்தில் அனைத்து இந்துக் குடும்பத்தினரும் விநாயகர் கோவிலுக்கு சென்று எல்லாவகை கனிகளும், கருவமணி என்றழைக்கப்படும் ஒன்றிரண்டு சிறிய கருமையான வளையல் வைத்தும், வீட்டிலிருந்து காற்படி அரிசியில் நாட்டுச்சர்க்கரை கலந்து  எடுத்து வந்து விநாயகருக்கு படைத்திட்டு, வணங்கிய பின்னர், வீட்டுச்சர்க்கரை அரிசியும், பழங்களையும் அங்கு குழுமியிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்துவிட்டு மீதமுள்ளவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து தெய்வத்திடம் படைத்திட்டு பின்னர் அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து உண்ணுவார்கள். காவிரி ஆற்றுக்கரையோரம் உள்ள மக்கள் அங்கு ஆற்றுக்கரையோரம் உள்ள விநாயகர் கோவிலிலும், காவிரி ஆற்றுக்கு தூரமாக உள்ள மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள குளத்தின் அருகில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் கோவிலிலும் வந்து வணங்கி விட்டு வீட்டுக்கு செல்வார்கள். சிறுவர்கள் குழுவாக இணைந்து தங்கள் தந்தை வாங்கி கொடுத்த சப்பரம் என்றழைக்கப்படுகின்ற சிறிய ரக தேரினை காவிரி ஆற்று கரை வரையிலும் இழுத்துக் கொண்டு சென்று வருவார்கள். 

காவிரி தண்ணீர் வழிபாடு தாண்டி இக்கரையோர மக்களின் விவசாய வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றது. ஆடிப்பட்டம் என்று அழைப்பதுண்டு. ஆடிப்பட்டம் என்றால் ஆடியில் விதை வைத்து ஆவணியில் நாற்று நடுவார்கள், இப்படி நட்டு வைத்த நாற்றுக்கள் மூன்று மாதங்களில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும். அவ்வாறு இருக்கும் சமயத்தில் முதற்கதிர் அறுவடை செய்து குலதெய்வத்திற்கும், ஊரிலுள்ள அம்மனுக்கும், எல்லையிலுள்ள முனியாண்டவருக்கும் படைத்திட்ட அறுவடை முடித்து, வீட்டிற்கு தேவையான நெற்களை மூட்டைகளாக வீட்டிலும், எஞ்சிய நெற்குவியலை அரசு தானியக் கிடங்கிற்கு கொண்டு சென்று விற்று அதனில் கிடைக்கின்ற வருமானத்தினை வைத்து அடுத்த பட்டம் நாற்று வைத்து நடவு செய்ய ஆரம்பிப்பார்கள். இவை அனைத்தும் காவிரி தண்ணீரால் தான் நடத்தப்படும். ஆடியில் விதை வைத்தால் பெருகும் என்பது ஐதீகம். எனவே ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகின்றது

இந்த சமயங்களில் புதிதாக திருமணமான தம்பதிகள் காவிரி ஆற்றுக்கரையோரம் வந்து அங்கிருக்கும் விநாயகர் முன்னிலையில் தங்கள் பழைய தாலிக்கயிற்றை கழட்டி புதிய தாலிக்கயிறாக மாற்றி கழுத்தில் இட்டுக் கொள்வார்கள். இவை தாலி நிலைப்பதற்கும் தங்கள் கணவன் மற்றும் பிள்ளைகள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றும் வேண்டி இவ்வாறு செய்யப்படுகின்றது. அனைத்து குடும்ப பெண்களும், இளம் பெண்களும் கோவிலுக்கு வந்து தங்கள் குடும்ப நலனுக்காக வேண்டிக்கொள்வார்கள்.இத்தகைய பழக்கங்களும் தொன்று தொட்டு காவிரிக்கரையில் நடைபெற்று வருகின்றது. 

காவிரியாற்றின்  கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி, குளித்தலை,  திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.