புதன், 18 அக்டோபர், 2023

சிவசங்கரன் சிறிய வயதில் பெரிய மனம் கொண்டவன்

                 சிவசங்கரன் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றான். அவன் பகுதி நேரமாக ஹிந்தி மொழி கற்று வருகின்றான். இன்று ஆகஸ்ட் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு ஹிந்தி பாடத்தில் இரண்டாம் நிலைக்கு பொதுத்தேர்வு வைத்திருக்கின்றனர். காலையிலேயே தன் சகதோழனுடன் அவன் தந்தைகூட இருசக்கர வாகனத்தில் தேர்வு நடைபெறும் பள்ளியை வந்தடைந்தான். அங்கே அவன் தன் மாமா, மாமி, மற்றும் சிவபாலனையும் பார்க்கின்றான். இன்று சிவபாலனுக்கும் தேர்வு. இருவரையும் தேர்வு எழுதும் கூடத்தில் அவனது மாமாவும் மாமியும் தேர்வு தொடங்கும் முன்னர் அவர்கள் இருக்கையில் அமரவைத்துவிட்டு சென்றனர். இருவரும் ஹிந்தி தேர்வு நன்றாக எழுதினார்கள். தேர்வு முடிந்து மதியம் உணவு இடைவேளை விடப்பட்டது.

          அங்கே அவனது மாமாவும், மாமியும் இருவருக்கும் உணவுப்பொட்டலமும் சில உளுந்து வடைகளும் வாங்கி வந்திருந்தனர். சிவபாலன் தன் நண்பர்கள், தோழிகளை கண்டவுடன் அவர்களுடன் கலந்துரையாடினான். அவனது நண்பர்களும், தோழிகளும் சிவபாலனுடன் சேர்ந்து உணவு உட்கொள்ள அழைத்தனர். சிவபாலன் தன் தாயுடன் நண்பர்களுடனும் உணவு உட்கொள்ள அமர்ந்தான், அவன் தாய் சிவபாலனுக்கான உணவையும் சில வடைகளையும் அவனிடம் கொடுத்தார். அவன் தன் தாய் தனக்களித்த உளுந்து வடைகளை தன் நண்பர்களுக்கு ஆளுக்கு ஒன்றாக கொடுத்தான். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொண்டனர். 

      அவன் தந்தை சிவசங்கரனுக்கு வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தினையும் மீதமிருந்த ஒர் வடையையும் எடுத்துக்கொண்டு சிவசங்கரனிடம் சென்றார். அங்கே சிவசங்கரன் தன் நண்பர்களுடன், தோழிகளுடன் உணவு உட்கொள்ள ஒன்றாக அமர்ந்திருந்தான். அவன் மாமா அவனுக்கு வாங்கிய உணவு பொட்டலத்தையும் ஒரு வடையையும் அவனிடம் அன்புடன் கொடுத்தார். அதனை ஆவலாக வாங்கிய சிவசங்கரன் தன் தாய் தனக்களித்த மதிய உணவினை சாப்பிடாமல் வைத்துவிட்டு, தன் தாய்மாமா பாசமாக வழங்கிய உணவுப் பொட்டலத்தினை பிரித்து உண்ணத்தொடங்கினான். தன் மாமா கொடுத்த ஓர் வடையினை தன்னை சுற்றி அமர்ந்து உணவு உட்கொண்ட நண்பர்கள் ஆறு பேருக்கும் பிரித்து பகிர்ந்து கொடுத்து உணவு உட்கொண்டான். அனைவரும் உணவு உட்கொண்ட பின்னர் அவனுடைய தோழி ஒருவர் மட்டும் தன் மதிய உணவுக்காக தன் பெற்றோரைப் பார்த்து காத்திருந்தாள். அவன் சிவசங்கரன் மாமாவிடம் தொலைபேசி வாங்கி தன் தந்தைக்கு போன் செய்தாள். தந்தையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனை கவனித்த சிவசங்கரன் "அக்கா என்னுடைய மதிய உணவினை சாப்பிடுங்கள்" என்று தன் தாய் தனக்கு அளித்த உணவினை தன் சகதோழிக்கு அன்புடன் வழங்கினான். அவள் அதனை ஆவலுடன் பெற்றுக்கொண்டு உட்கார்ந்து உணவு உண்டாள். பின்னர் அனைவரும் ஒருமுறை பாடத்தினை படித்துவிட்டு மீண்டும் மதிய நேர 

               தேர்வுக்கு சென்றனர். அனைவரும் தேர்வினை நான்றாக எழுதிவிட்டு மாலை வீடு சென்றனர். சிவசங்கரனும் சிவபாலனும் தம்தம் வீடுகளுக்கு சென்றனர். இச்செயல் உணர்த்தும் நீதி யாதெனில் சிவசங்கரன் தனக்கு கிடைத்த ஓர் உளுந்து வடையினையும் தன் நண்பர்கள் ஆறு பேருக்கும் பகிர்ந்தளித்து உண்டான். 

குறள் உணர்த்தும் நீதி: 

அதிகாரம் 07 - மக்கட்பேறு - திருக்குறள் 62 

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 

பண்புடை மக்கள் பெறின். 

பொருள்: பிறரால் பழிக்கப்படாத நற்குணம் நிறைந்த மக்களைப் பெற்றால், அந்தப் பெற்றோரை ஏழு பிறவியிலும் துன்பங்கள் சேராது.

அதிகாரம் 33 - கொல்லாமை  - திருக்குறள் 322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

பொருள்:  கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்றி வருதல் நூலோர் தொகுத்துக் கூறிய அறங்களிலெல்லாம் சிறந்ததாகும்.